பிரித்தானிய மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த அதிரடித் தீர்ப்பு
பாலஸ்தீன ஆதரவு செயல்பாட்டு அமைப்பான 'பாலஸ்தீன ஆக்ஷன்' அமைப்பை 'பயங்கரவாத' அமைப்பாக அறிவித்து பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடை சட்டப்பூர்வமானதுதான் என்று அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த அமைப்பிற்கு பிரித்தானிய அரசு விதித்த தடை சட்டவிரோதமானது மற்றும் தேவையற்றது என்று கடந்த பெப்ரவரியில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூ கார் தலைமையிலான அமர்வு, திங்கட்கிழமையன்று இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுவரை 3,000இற்கும் மேற்பட்டோர் கைது
இந்த அமைப்பின் செயல்பாடுகள் வன்முறையற்றவை அல்ல என்றும், சட்டப்பூர்வமான வணிகங்களை முடக்கும் நோக்கோடும், பொதுமக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பயங்கரவாத தன்மையோடும் இருந்ததாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தப்போவதாக 'பாலஸ்தீன ஆக்ஷன்' அமைப்பின் இணை நிறுவனர் ஹுதா அம்மோரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தீர்ப்பு ஆழ்ந்த ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்களை மனித உரிமைகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்துவதாக பிரித்தானிய அரசு மீது சாடியுள்ளது.
இந்த தடை விதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 3,000இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து லண்டனில் உள்ள ரோயல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தீவிர போராட்டங்கள் வெடித்துள்ளன.