13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சீர்குலைக்க வேண்டாம்-ரதன தேரரிடம் கோரிய குமார வெல்கம
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்துவதை சீர்குலைத்து நாட்டை தொடர்ந்தும் அழிக்க வேண்டாம் என அத்துரலியே ரத்ன தேரரிடம் கோரிக்கை விடுப்பதாக நவ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு அழிவின் விளிம்புக்கு செல்வதை தவிர்க்க முடியாது
அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட தரப்பினரின் தவறான ஆலோசனைகள் மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசின் முரட்டுத்தனமான கொள்கையை நடைமுறைப்படுத்தியதன் காரணமாகவே நாட்டு மக்களுக்கு தற்போது சாப்பிடவும் வழியில்லாமல் இருக்கின்றது.
இந்த நிலையில், தற்போது 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சீர்குலைத்தால் நாடு அழிவின் விளிம்புக்கு செல்வதை தவிர்க்க முடியாது.
அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை அழிவுக்குள் தள்ள முடியாது. இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவது இந்த சந்தர்ப்பத்தில் அத்தியவசியமான விடயம்.
ரதன தேரரை நாங்கள் மதிக்கின்றோம். எனினும் உங்களை போன்றவர்கள் காரணமாக தற்போது நாட்டில் சாப்பிடவும் எதுவுமில்லை. இரசாயன பசளை தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட நிலைமையால் போஷாகின்மை அதிகரித்துள்ளது.
13வது திருத்தச் சட்டம் இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும்
அன்று நீங்கள் எடுத்த கடுமையான தீர்மானங்கள் காரணமாக நாடு தற்போது பாதிப்பை அனுபவித்து வருகிறது. இதனால், இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தக்கூடாது.
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பெரும்பான்மையானவர்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். இதனால், அதனை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை.
இதன் மூலமே எமது இனங்களுக்கு இடையில் ஒற்றுமை இருக்கின்றது என்பதை உலகத்திற்கு காண்பிக்க முடியும். 13 வது திருத்தம் கொண்டு வரப்பட்டு தற்போது 37 ஆண்டுகள் கடந்துள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துகிறோமா இல்லையா என்பதை சர்வதேச அவதானித்துக்கொண்டிருக்கின்றது எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
