குறைந்த விலையில் விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிப்பு (Photos)
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக உரங்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் தற்போது விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை பகிர்ந்தளிப்பதறகான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் யூரியா பசளை விநியோகம் குறைந்த விலையில் முதல் கட்டமாக வழக்கப்பட்டுள்ளது.
இவற்றில், ஆறாயிரத்து அறுபது மூடைகளில் மூவாயிரம் மூட்டைகள் முதல் கட்டமாக இன்று (18 ) வழங்கப்பட்டது.
ஒரு ஏக்கருக்கு நாற்பது கிலோ அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதுடன், இதனை விவசாயிகள் ஆர்வத்தோடு பெற்றுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி: எப்.முபாரக்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு (யூரியா) உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரம் இன்றைய தினம் (18) மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் அன்ரன் மெரின் குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டதுடன், இதன்போது தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ( யூரியா) உரம் வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு ஏக்கர் சிறுபோக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 40 கிலோ யூரியா உரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
205 மெற்றிக்தொன் யூரியா உரத்தில் முதல் கட்டமாக 101 மெற்றிக்தொன் யூரியா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கமநல வங்கியினால் சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் வகையில் 25 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் , விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி: ஆஷிக்







