சீனாவின் கோவிட் தடுப்பூசி விவகாரத்தில் நிபுணர் குழு நீக்கம் மோசமான விளைவு! சிரேஷ்ட தமிழ் பெண் சட்டத்தரணி உயர் நீதிமன்றில் மனு
சீனாவின் சினோபார்ம் கோவிட் தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன், தரம் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஊடாக முறையான அனுமதி அளிக்கப்படும் வரை அத்தடுப்பூசியை பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இந்த மனு நேற்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நோயாளர்களின் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், அதன் தலைவர், செயலர் ஆகியோர் இம்மனுவை, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்துள்ள நிலையில், சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி, மருந்து உற்பத்தி, பகிர்ந்தளித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் அமைச்சர் சன்ன ஜயசும உள்ளிட்ட 24 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
சீனாவின் குறித்த தடுப்பூசி நாட்டுக்குள் அனுமதிக்கப்பட முன்னர், அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் உள்ளடங்கிய உறுப்பினர்களை தன்னிச்சையாக நீக்கும் செயற்பாடு பொது மக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், அது அரசியல் அமைப்பின் 12 (1)ஆம் உறுப்புரையை மீறும் செயல் எனவும் குறித்த மனு ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, குறித்த தடுப்பூசி தொடர்பில் ஆராய நியமித்த நிபுணர் குழுவின் விபரங்களையும், அவர்கள் அத்தடுப்பூசி தொடர்பில் கோரிய விடயங்களையும் வெளிப்படுத்தப் பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன், தரம் உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் வரை அதனை இலங்கையில் பயன்படுத்தத்தடை விதிக்கப்படல் வேண்டும் எனவும், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுத் தீர்ப்பு வழங்கும் வரை அவ்வூசிக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.