பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி பணியிடை நீக்கம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பேருந்து இலங்கை போக்குவரத்துச் சபை கண்டி சாலைக்குரியது என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ஊடாக உரிய பிராந்திய முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சாரதியை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சாரதி தற்காலிக பணி இடைநிறுத்தம்
மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் பனிக்கன்குளம், கிளவன்குளம் மற்றும் திருமுறிகண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்பில் பேருந்து சேவை வழங்கப்படாததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக, பாடசாலை முடிவடைந்த பின்னர் ஆசிரியர்களும் மாணவர்களும் பேருந்துக்காகக் காத்திருந்த நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தொன்று ஆசிரியர்களை ஏற்றிச் சென்றபோதும் குறித்த மாணவர்களை ஏற்ற மறுத்ததாகவும், பேருந்தில் ஏறிய மாணவி ஒருவர் தவறி விழ நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்திய சூ.விமலேஸ்வரன், விடயத்தை இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குறித்த பேருந்து கண்டி இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்குரியது என அடையாளம் காணப்பட்டதுடன், அந்த சாலையின் பிராந்திய முகாமையாளர் ஊடாக சம்பந்தப்பட்ட சாரதியை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தும், அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதும் பொது போக்குவரத்துச் சேவையின் முக்கியப் பொறுப்பாகும் எனத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர், மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டையும் அதிகார சபை பொறுத்துக்கொள்ளாது என்றும் குறிப்பிட்டார்.

பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் விதிமீறல்கள், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகள் தொடர்பில் 071 9090900 என்ற வட்ஸப் இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் போன்ற ஆதாரங்களையும் இணைத்து அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி கொடுக்கப்போகும் நடிகர் ரஜினிகாந்த்... எப்போது, எந்த டிவி, முழு விவரம் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri