வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுப்பு
வவுனியாவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
நாடளாவிய ரீதியில் கோவிட் - 19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக வன்னி இராணுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதுடன், நடைபாதைகளுக்கு இராணுவத்தினரால் தொற்று நீக்கி மருந்து வீசப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையம் மற்றும் வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


