28 ஆண்டுகளாக ரூ.6,000 கொடுப்பனவில் முன்பள்ளி ஆசிரியர்கள் : அவலங்களைக் கேட்டறிந்த சிறீதரன் எம்.பி
மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைக்கமைவாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல், இன்று(29.11.2026) மன்னார் - காட்டாஸ்பத்திரி, திருவள்ளுவர் முன்பள்ளியில் இடம்பெற்றுள்ளது.
முன்னேற்றமின்றி வாடும் ஆசிரியர்கள்
இதன்போது, முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு தொழில்சார் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
குறிப்பாக, அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களது நியமனங்களும் தங்களின் சேவைக்காலத்தைக் கவனத்திற்கொண்டு கல்வி அமைச்சின் கீழ் வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படும் நியமனங்களுக்கு அடிப்படை மாதாந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய கல்வித் தகுதிகளைக் கொண்டிருந்தும், சுமார் 28 ஆண்டுகள் வரை எவ்வித மேலதிக கொடுப்பனவுகளும் இன்றி மிகக் குறைந்த தொகையான 6,000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவுடன் பணியாற்றி வரும் முன்பள்ளி ஆசிரியர்கள் கூட இன்னமும் இருப்பதாகவும், தங்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளோ அல்லது ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகளோ வழங்கப்படுவதற்கான எந்தவொரு திட்ட வரைபோ இல்லை என்றும் வரவு செலவுத் திட்டங்களில் தாங்கள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர்கள் எம்.பியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாதம் சம்பளம் ரூ.6,000 வழங்கப்படும் அவலம்
கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னரே தாங்கள் மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட போதிலும், மாதாந்தக் கொடுப்பனவுகளைப் பெறுவதில் தொடர்ந்தும் நெருக்கடிகள் நிலவுவதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், துறையிலுள்ள சம்பள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர்கள், பிரதேச சபைகளின் ஆளுகையின் கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்கள், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் (CSD) கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு அதிகமான சம்பளமும் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வெறும் 6,000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவைக் கொண்டு தங்களால் தொடர்ந்தும் சேவையினை முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்த ஆசிரியர்கள், தங்களது சேவைக்காலம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் கல்வி அமைச்சின் ஊடாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வைப் பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் - காட்டாஸ்பத்திரி திருவள்ளுவர் முன்பள்ளியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் தலைவர், செயலாளர் ஜஸ்ரின் துரம், மேனாள் நகரசபை உறுப்பினர் பிரசாத் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri