அம்பாறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்ட முக்கிய கலந்துரையாடல்
அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகளின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் ஏற்பாட்டில் நேற்று (03.01.2026) நிந்தவூர் தனியார் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கட்சியின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடலில் இணைந்து, பிரதிநிதிகளுடன் நேரடியாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கல்வி மேம்பாட்டு திட்டம்
றிஷாட் பதியுதீன் ஆற்றிய உரையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி மற்றும் கலாசாரப் பிரிவினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு அரசியல் கட்சியின் சமூகப் பொறுப்பின் முக்கிய அங்கமாக கல்வி மேம்பாட்டு செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ச்சியான முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, மாவட்ட மக்களின் தேவைகளுக்கு சிறந்த தீர்வுகளை முன்வைக்கும் நோக்கில் இந்த கரைந்துரையாடல் அமைந்துள்ளதாகவும் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அமைப்பு, எதிர்கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள், பிரதேச மட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன், மாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


