கிளிநொச்சி மாவட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!
கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வா புயலால் ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமைகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று(1) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00மணிக்கு இடம்பெற்றது.
டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் நிலைமைகளைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடல்
இதன்போது, தற்போதைய களநிலவரங்கள் குறித்தும் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டறிந்து கொண்டதுடன், இடருக்குப் பின்னரான காலப்பகுதியில் அந்தந்த திணைக்களங்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான அடிப்படைச் வசதிகளை உறுதி செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்போது அரசாங்க அதிபர் இந்த அனர்த்த வேளையில் முப்படையினர் மற்றும் துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் சேவைகள் மிக அளப்பரியது என்றும் அவர்கள் மாவட்டத்தில் திறம்பட தமது உதவிகளை மேற்கொண்டு வருவதாக மாவட்டம் சார்பாக அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
புள்ளி விபரங்கள்
மேலும் சீரற்ற வானிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, டித்வா புயலால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வரை 7,782 குடும்பங்களைச் சேர்ந்த 17,590 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.



