கிளிநொச்சி நகர சபை எல்லையை மீள் நிர்ணயம் செய்யுமாறு கோரிக்கை
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினை நகர சபையாக தரம் உயர்த்துவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது நகர சபைக்கான எல்லை நிர்ணயம் மிகவும் பாரபட்சமான முறையில் மேற்கொள்ளப்பட்டமையினால் அதனை மீள் நிர்ணயம் செய்ய வலியுறுத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநீதியான செயற்பாடு
புதிய நகர சபைக்கான எல்லை நிர்ணயத்தில் ஒரு சமூகம் அதிகம் வாழ்கின்ற பிரதேசங்கள் புறக்கணிப்பட்டு பாரபட்சமான முறையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டமையானது சம காலத்தில் இழைக்கப்பட்ட அநீதியான செயற்பாடாக கருதப்படுகின்றது.
நகர சபைக்கான எல்லை நிர்ணயம்
எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டவர்கள் அக்காலப்பகுதியில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், போன்றவர்களின் கருத்துக்களை கேட்டறியாது அப்போது அதிகாரத்தில் இருந்த அரசியல் தரப்பினர்களும், அதிகாரிகளும் இணைந்து பாரபட்சமான முறையில் நகர சபைக்கான எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளனர்.
எனவே இதனை மீள் பரிசீலனை செய்து பாரபட்சமற்ற நியாயமான எல்லை மீள்
நிர்ணயத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியை சேர்ந்த
ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.




