மலேரியாவை பரப்பக்கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப்பகுதியில் கண்டுபிடிப்பு (VIDEO)
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அனோபிலிஸ் டிபென்சி எனும் மலேரியா அல்லது நகரப்புற மலேரியாவைப் பரப்பக்கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் ஒரு அபாயகரமானது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்பு மூலம் எமது பகுதியிலும் மலேரியா பரவக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது.
மலேரியாவை பரப்பக்கூடிய நுளம்புகள் எங்களுடைய பிரதேசங்களில் தாராளமாக இருக்கின்றன. எனவே வெளிநாட்டிலிருந்து ஒருவர் இந்த மலேரியா தோற்றத்துடன் இங்கே வந்தால் உள்ளூரிலே இந்த நோய் பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் எவ்வாறு இந்நோயினை கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். குறிப்பாக மலேரியா உள்ள நாடுகளுக்குச் செல்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரைக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 14135 கோவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர், ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து டிசம்பரில் 1381 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
ஜனவரி 4 வரை 33 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். கோவிட் இறப்புகளைப் பொறுத்தவரைக் கடந்த வருடம் செப்டம்பரில் 386 இறப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை படிப்படியாகக் குறைவடைந்து டிசம்பரில் 41 உயிரிழப்புகள் பதிவானது.
இந்த வருடத்தில் இதுவரை 3 கோவிட் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசியைப் பொறுத்தவரை வட மாகாணத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியை 90 வீதமானவர்களும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 80 வீதமானவர்களும் பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை 30 வயதுக்கு மேல் 25 வீதமானவர்கள் பெற்றுள்ளனர்.
இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.