போலாந்து - இலங்கை இடையில் நேரடி விமான சேவை
போலாந்து மற்றும் இலங்கை இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போலாந்தின் வோர்சோ நகரின் சோப்பின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
போலாந்து விமான சேவையின் போயிங் -787 டீரின் லைனர் ரக விமானம் இவ்வாறு இன்று காலை 5.35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. போலாந்து விமானம் தரையிறங்கியதும் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு விமானத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டது.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை குளிர்காலத்தில் இலங்கையும் போலந்துக்கும் இடையிலான இந்த விமான சேவைகள் நடத்தப்படும்.
குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கு ஐரோப்பா, ஸ்கென்டிநேவியன் நாடுகள், போல்டிக் நாடுகள், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து விமான பயணிகளை இலங்கைக்கு ஏற்றி வரவுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தரையிறங்கிய விமானத்தில் 230 பயணிகள் வந்துள்ளதுடன் இதன் பின்னர் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் இலங்கைக்கான நேரடி விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன.
7 ஆயிரத்து 293 கிலோ மீற்றர் தூரத்தை கடந்தது போலாந்து விமானம் 9 மணி நேரத்தில் இலங்கையில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது விமான பயணிகளை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இலங்கைக்கான போலாந்து தூதுவர் ஹெடம் புரகோவிஸ்கி (Adam Burakowski), விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி (G.A.Chandrasiri) உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
