தேர்தல் கண்காணிப்பு பணிகளில் கொழும்பை தளமாகக்கொண்ட இராஜதந்திரிகள் ஈடுபட தடை
அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் போது, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்களின் இராஜதந்திரிகள், கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்க தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்; விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளூர் தூதரக பணியாளர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு பணி
இலங்கையை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் எந்தவொரு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட முடியாது என்றும், தேர்தலை அவதானிக்க அனுமதிப்பது தேர்தல் ஆணையம் அல்லது நாட்டின் கொள்கையல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஈடுபட முடியாது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்கனவே பணியில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழுவுடன், இணைந்து கொள்வதற்காக மேலதிக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவொன்று நாளை இலங்கை வரவுள்ளது. இதன்படி சுமார் 70 உறுப்பினர்களை இந்த பணியில் ஈடுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |