தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மம்! வெளியான புதிய தகவல்
படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தின் இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று(26.05.2023) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம், இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்று (25.05.2023) 5 பேர் கொண்ட மருத்துவகுழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பிரேத பரிசோதனை
இதன்போது குற்றப் புலனாய்வு அதிகாரிகள், கைரேகை அதிகாரிகள், ஷாப்டரின் உறவினர்கள், அவரது சடலத்தை அடையாளம் கண்டவர்கள், மலர்சாலை முகாமையாளர், தலைமை தடயவியல் மருத்துவ அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரும் இவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்ததாக தெரியவருகின்றது.
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இதனை ஆராய்ந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் அறிவித்திருந்தமைக்கு அமையவே நேற்று சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலம் மீட்கப்பட்டதையடுத்து, தினேஷ் ஷாப்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை தொடர்பான வழக்கை விசாரணைக்கு அழைத்த கோட்டை மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
மேலதிக விசாரணைகளை அன்றைய தினம் முன்னிலைப்படுத்துமாறு மேலதிக நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |