கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர்! சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, தினேஷ் ஷாப்டர் பொரளை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது நெருங்கிய நண்பரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் புலனாய்வாளர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தினேஷ் ஷாப்டர் திடீரென பொரளை செல்வதாகக்கூறி கொழும்பு 07, மல் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறியதும், அவரது கார் நேராக பொரளை மயானத்திற்கு வந்ததும், தொலைபேசியினை ஆய்வு செய்ததன் மூலம் வெளிவந்த உண்மைகளுக்கமைய இவ்வாறு சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
இதற்கமைய,புலனாய்வாளர்களின் சந்தேகத்தின் கீழ் பலர் வந்துள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவர்களின் நடத்தையை கடுமையாக அவதானித்து அவர்களின் கையடக்க தொலைபேசி வலையமைப்பைச் சரிபார்க்குமாறு பணித்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வாகனத்தை ஓட்டிச் சென்றவர் பொரளை பொது மயானத்திற்குள் உள்ள வீதிகளை நன்கு புரிந்து கொண்டவர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு புரிதல் ஏற்படுவதற்கு, அவர் பலமுறை மயானத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்றும், தினேஷ் ஷாப்டர் தனது காரை வீட்டிலிருந்து மயானத்திற்கு ஓட்டிச் சென்றிருந்தால், பொரளை மயானத்திற்குச் செல்வது இது முதல் தடவையல்ல என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
உயர் சமூகத்தொழிலதிபர் ஒருவரை சந்திக்க கல்லறைக்கு செல்வது ஒரு அசாதாரண நிகழ்வு. மேலும் அவர் வீட்டிலிருந்து ஒரு சாரதியுடன் வந்திருக்கலாம். ஏன் அப்படி வரவில்லை. எனவே, மிகவும் தனிப்பட்ட விஷயங்களுக்காக இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
அத்தகைய பயணத்தில் அவர் விசுவாசமான நபரைச் சந்திக்க வந்திருக்கலாம்.யாரோ ஒருவர் அவரது வாகனத்தில் ஏறி தினேஷ் ஷாப்டரை கல்லறைக்கு அழைத்து சென்றிருக்கலாம்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அவ்வாறான விடயம் வெளிவரவில்லை. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாரும் காரில் ஏறவில்லை என்றால், கல்லறையில் அவரைச் சந்திக்க ஒருவர் காத்திருக்கின்றார். அவர்தான் தினேஷ் ஷாப்டரின் கொலையாளி" என்றும் அதிகாரி கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை, ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்குமாறு பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல இன்று (20) உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



