பேருந்துடன் லொறியொன்று மோதி விபத்து! ஒருவர் பலி - மற்றுமொருவர் வைத்தியசாலையில்
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று ( 20) காலை 7:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது விபத்தில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பயணி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பேருந்தின் சாரதி ஓய்வெடுக்க எதிர் திசையில் பேருந்தை நிறுத்தியபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்த இரு பயணிகள் பின்புற கதவிலிருந்து இறங்கி பிரதான வீதிக்கு வந்தபோது நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியாவுக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதுண்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.