புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய அறுவர் கைது
யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புதையலை தோண்ட முயற்சித்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், நேற்றைய தினம் (12.02.2024) 5ம் வட்டாரம் இரணபாலை - புதுக்குடியிருப்பில் உள்ள தென்னை தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபர்கள் இரணபாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது, குறித்த இடத்தில் தண்ணீர் எடுப்பதற்காக கட்டப்பட்ட கிணற்றின் அருகில் 03 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழியினை தோண்டிக் கொண்டிருந்த நிலையிலேயே சந்தேக நபர்களும், பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபர்கள், நெடுங்கேணி, மதவாச்சி, பதவியா, தெய்நதர, ஹக்மான போன்ற பகுதிகளை சேர்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆகியன இன்று (13.02.2024 ) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |