ரணிலை விமர்சிக்காதீர்! அவகாசம் வழங்குங்கள்!- திகாம்பரம் வேண்டுகோள்
"நெருக்கடியான நிலைமையில் தான் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். எனவே, அவரை உடனடியாக விமர்சிக்காமல் அவருக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தனியார் வானொலி ஒன்றில் ஒலிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டில் தற்போது சர்வாதிகார ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கின்றார். தன்னை நம்பி வாக்களித்த 69 இலட்சம் மக்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றியுள்ளார். அவருக்கு முழு அதிகாரமும் இருந்தும் அவர் நாட்டை முன்னேற்றாமல் நாட்டை அவர் சீரழித்துவிட்டார்.
சர்வகட்சி அரசு அமைந்தால் ஆதரவு வழங்க தயார்
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றிருந்தால் அவரையும் சுதந்திரமாகச் செயற்பட விட்டிருக்கமாட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
எனவே, ஜனாதிபதி கோட்டாபய உடன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகிய பின்னர்
சர்வகட்சி அரசு அமைந்தால் அதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்
சக்தியினர் மட்டுமல்ல அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினரும் ஆதரவு
வழங்குவார்கள். இதை இரு கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படையாகவே
தெரிவித்துவிட்டார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.