ஒரு லீட்டர் தண்ணீர் 160 ரூபா! ஆனால் ஒரு லீட்டர் பால் 110 ரூபா: பால் பண்ணையாளர்கள் விசனம் (Video)
ஒரு லீட்டர் தண்ணீர் போத்தலின் விலை 160 ஆனால் ஒரு லீட்டர் பாலின் விலை 110 ரூபாவாகும் என மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கணேசபுரத்தில் இயங்குகின்ற பிள்ளையார் பால் பண்ணையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஊடக சந்திப்பொன்றில் நேற்று (16.10.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எமது பண்ணையாளர்கள் கடந்த காலங்களில் 10 தொடக்கம் 20 லீட்டர் பால் கறக்கும் மாடுகளை வளர்த்து வந்தார்கள்.
அதிக விலையேற்றம்
தற்போது அனைத்து கால்நடை தீவினங்களுக்கும், மருந்துப் பொருட்களுக்கும் அதிக விலையேற்றம் காரணமாக மாடுகளை விற்பனை செய்து கொண்டு வருகின்றார்கள்.
இதனால் எமது பகுதியில் பாலுற்பத்தி மிக வேகமாக குறைவடைந்து கொண்டு செல்கின்றது. எமது பண்ணையில் எமது பகுதியிலிருந்து நாளாந்தம், சுமார் 500 லீட்டர் பாலைச் சேகரித்து வந்தோம்.
தற்போதைய நிலையில் 200 லீட்டருக்கும் குறைவாவே பால் சேகரிக்கப்படுகின்றது.
மாடுகளுக்கான வைக்கோல் 15000 ரூபா, ஒரு கிலோகிராம் தவிடு 120 ரூபா, மருந்துகளின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ள நிலையில், ஒரு லீட்டர் தண்ணீர் போத்தலின் விலை 160 ஆனால் ஒரு லீட்டர் பாலின் விலை 110 ரூபாவாகும்.
கிராமிய பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு பாலுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் இந்த விடயம் நடைமுறையில் கொண்டுவரப்படவில்லை.
அரசாங்க நடவடிக்கை
எமக்கு அரசாங்கம் உதவ முன்வராவிட்டால் எமது பகுதியில் பாலுற்பத்தி இல்லாமல் போகும் நிலமை ஏற்படும்.
பாலுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்தபோது எமது பண்ணையாளர்கள் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கறவைப் பசுக்களை கொள்வனவு செய்தார்கள்.
தற்போது பாலுக்கு நியாய விலை இன்மையால் பெற்ற கடனை பண்ணையாளர்கள் மீளச் செலுத்த முடியாத நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம்
இதனால் எமது வாழ்வாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதோடு எமது பின்ளைகளின் கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல விடயங்களில் மாபெரும் கீழ் நிலைக்குத் தள்ளப்படும் நிலமைக்கு ஆளாகியுள்ளோம்.
எமது பண்ணையாளர்கள் மாடுகள் வளர்ப்பதை தொடர்ந்து மேற்கொள்வதா கைவிடுவதா என்ற நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளனர்.



