கருப்பு சந்தையில் டீசல் பெற்று அறுவடை செய்யும் விவசாயிகள்
வவுனியா மாவட்ட விவசாயிகள் 1200 ரூபாய்க்கு டீசல் பெற்று சிறுபோக நெல் அறுவடை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் டீசல் பங்கீடு சீராக நடை பெறாமையால் கருப்பு சந்தையில் அதிகூடிய விலையில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகத்தில் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது. சாதாரணமாக, ஜூலை முதல் கிழமையில் இருந்து ஆகஸ்ட் கடைசி கிழமை வரை இந்த அறுவடை இடம் பெறும்.
டீசல் தட்டுப்பாடு
அறுவடைக்கு ஏறத்தாழ 3 இலட்சத்திற்கு மேலதிகமான டீசல் தேவைப்பட்டுள்ளது. இதனை வாராந்தம் பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்திருந்தது.
எனினும், அறுவடைக்கு தேவையான போதியளவான டீசல் வழங்கப்படாமல், 27 ஆயிரம் லீற்றர் டீசல் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
https://tamilwin.com/article/7-thousand-seafaring-families-affected-1657777068 |
கருப்பு சந்தை
இதனால், விவசாயிகள் 1200 ரூபாய்க்கு டீசலை கருப்பு சந்தையில் டீசல் பெற்று அறுவடை செய்ய வேண்டியுள்ளது.
சிறுபோகம் மேற்கொள்ளும் விவசாயிகள் யூரியா உரத்தை 42 ஆயிரம் ரூபாய்க்கு, அதிகரித்த விலையில் கிருமி மற்றும் களை நாசினிகளையும் பெற்று கொள்ள வேண்டியுள்ளது.
மாவட்ட செயலகத்தின் சரியான பங்கீடு முறைமை இல்லாமையே இதற்கு காரணம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட விவசாய சம்மேளன தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
"மாவட்டத்தில் தற்போது எரிபொருள் நெருக்கடி உள்ளது. சிறுபோக அறுவடை சீராக நடைபெறாவிட்டால் எதிர்காலத்தில் சோற்றுக்கும் பஞ்சம் ஏற்படும்.
விவசாயிகளின் கோரிக்கை
எனவே, கனரக மற்றும் டிப்பர் வாகன சாரதிகள் விவசாயிகளின் அறுவடைக்காக டீசலை பெற விட்டுக் கொடுக்க வேண்டும். இதேவேளை, டீசல் விநியோகிக்கும் போது, கனரக மற்றும் டிப்பர் வாகனங்கள் அதிகமாக டீசலை பெற்றுக் கொள்வதால் விவசாய தேவைக்கு டீசலை பெற முடியாது உள்ளது.
தற்போது கட்டுமான பணிகள், குவாரி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கனரக மற்றும் டிப்பர் வாகனங்களுக்கு ஏன் அதிக டீசல் விநியோகிக்கப்படுகிறது?
இந்த வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு வவுனியா மாவட்ட செயலகத்திடம் கோரிய போதும் அவர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை" என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



