ஆடற்கலையில் கலாநிதி கற்கைநெறியினை நிறைவுசெய்துள்ள புலம்பெயர் ஆசிரியை!
புலம்பெயர் தேசங்களில் ஆடற்கலை மூலம் தமிழரின் கலை பண்பாடுகளை தொடர்ச்சியாக இளம் சந்ததியினருக்கு கற்பித்துவரும் ஆசிரியர்களுள் முதன்மைநிலையில் உள்ளவர்களில் ஒருவரும், திருக்கோணேஸ்வர நடனாலய இயக்குனருமான மதிவதனி சுதாகரன் அவர்கள், தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் ஆடற்கலையில் கலாநிதிப் பட்டத்திற்கான (முனைவர்) கற்கை நெறியினை (Doctor of Philosophy) நிறைவுசெய்துள்ளார்.
நடன நோக்கத்தில் தில்லானா – ஒர் பகுப்பாய்வு (A Critical Analysis Of Tillana on Dance Aspect) என்னும் ஆய்வுகட்டுரையினை முதுகலைமாணி மதிவதனி சுதாகரன் அவர்கள், தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை ஆய்வுநெறியாளர் முனைவர் இரா. மாதவி அம்மையார் அவர்களின் வழிநடத்தலில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் புறநிலைத் தேர்வாளர் முனைவர் எஸ். சரளா அம்மையார் அவர்களின் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார். பரதக்கலையில் தில்லானா தொடர்பாக அறிமுறை, செய்முறை தரவுகளை மிக ஆழமான நுனுக்கங்களுடன் ஆய்வுக்கு உட்படுத்தி தெளிவுபடுத்திய முது கலைமாணி திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்கள் தனது முதுநிலை மாணவர்கள் ஊடாக செய்முறை ரீதியாகவும் விளக்கமளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்களிற்கு முனைவர் பட்டத்தினை வழங்குவதற்கு தஞ்சாவூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பரிந்துரைப்பதாக புறநிலைத் தேர்வாளர் முனைவர் எஸ். சரளா அம்மையார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நடனத்துறையில் தில்லானாவின் தோற்றம் முதல் இன்றுவரை ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பாக சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆடல் வடிவங்கள் சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டிருப்பதாகவும், எல்லோருக்கும் விளங்கக்கூடடிய வகையில் எவரும் இதுவரை மேற்கொண்டிராத பல தில்லானாக்கள் இனம் காணப்பட்டிருப்பதாகவும்தெரிவித்துள்ளார்.
அனைத்துலகரீதியாக ஐபிசி தமிழினால் நடாத்தப்பட்ட நாட்டியதாரகை என்னும் பிரமாண்ட நாட்டியப்போட்டியில் 1kg தங்கக்கிரீடத்தினை வெற்றியீட்டிய நாட்டியதாரகையும் இவரின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.