மஞ்சள் படையணியின் புரட்சி! நெருக்கடிகளையும் வெற்றியாக்கிய தல தோனி(Video)
2023 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டியில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த இறுதிப்போட்டியானது பல இக்கட்டான சவால்களுக்கு மத்தியில் நிறைவடைந்துள்ளது.
நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றைய அணிகளுடன் ஒப்பிடுகையில் அவ்வளவாக பலம் வாய்ந்த வீரர்களை கொண்டிருக்கவில்லை.
தற்போது சென்னை அணியில் விளையாடுபவர்களில் ஜடேஜா, மொயின் அலி ஆகியோரை தவிர வேறு யாரும் எந்த நாட்டு தேசிய அணியிலும் இடம் பிடித்து சர்வதேச அளவில் விளையாடுபவர்கள் அல்ல.
இருந்தாலும் தோனியின் தனித்துவமான தலைமைத்துவ பண்பே சென்னை அணியை இறுதி கட்டம் வரை முன்னேற வைத்து வெற்றியை ருசி பார்க்க செய்துள்ளது.
தனித்துவ பண்பை கொண்ட தோனி
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் தோனியின் கண்களில் பதற்ற நிலையை அவதானிக்க முடியாது.
தோல்வியடையும் கட்டம் வந்தால் கூட அதனை எளிதாக எடுத்துக்கொண்டு அணி வீரர்களுடன் கடைசி வரை போராடி தம்மால் முடிந்தளவான ஆலோசனைகளை வழங்குவார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை அணி தலைமைத்துவத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது ஜடேஜாவிற்கு தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது.
ரவீந்திர ஜடேஜா ஒரு சிறப்பான வீரராக இருந்தாலும் சென்ற ஆண்டு அவரால் அணியை நன்றாக வழிநடத்த முடியாமல்போனது அப்பட்டமாக விளங்கியது. இதனால் ஜடேஜாவின் ஆட்டத்திலும் சற்று பின்னடைவை அவதானிக்க முடிந்ததுடன் சென்னை அணி லீக் சுற்றில் வெளியேறி இருந்தது .
இதுபோன்ற காரணங்களை கருத்தில் கொண்ட சென்னை அணியின் முகாமைத்துவம் மறுபடியும் தோனியை இந்த ஆண்டு அணி தலைவராக கொண்டு வந்தது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய திறமையை வெளிப்படுத்தி இருந்தது.
தொடக்கத்திலேயே 7 போட்டிகளில் 5 போட்டிகளை வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவான முதல் அணி என்ற பெயரையும் பெற்றுள்ளது. ஐ.பி.எல் தொடக்கத்திற்கு முன்னதாகவே அதிகளவு பயிற்சியில் இல்லாத வீரர்களையும் அனுபவம் குறைந்த வீரர்களையும் மட்டுமே சென்னை அணி தம் வசம் வைத்திருந்தது.
எதிரணியின் பலவீனம்
இது போன்ற ஒரு அணி இறுதிப்போட்டி வரைக்கும் முன்னேறி வந்து கோப்பையை கைப்பற்றி சென்றமை ஒரு வியக்கத்தக்க விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
அதிக அனுபவமற்ற, இளம் வீரர்களை வைத்து தனது சிறந்த தலைமைத்துவ இயல்பை வெளிப்படுத்தி உள்ளார் மகேந்திர சிங் தோனி. அணி வீரர்களின் பலம் பலவீனம் எல்லாவற்றையும் அறிந்து அவர்களில் சரியாக எந்த சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டும் என நன்றாக கற்று அறிந்தவர்.
இதேவேளை எதிரணி வீரர்களின் பலம் பலவீனம் அறிந்து அதன்படி செயல்பட்டு ஆட்டத்தை தன வசம் மாற்றியமைக்க கூடியவர்.
ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணியிடம் பெயர் சொல்லும் அளவிற்கு பந்துவீச்சு தர வரிசையை கொண்டிருக்கவில்லை. இருப்பினும் அவ்வாறான பலவீனங்களை பொருட்படுத்தாமல் தனது களத்தடுப்பு வியூகங்களை வைத்து அவற்றை நிவர்த்தி செய்துவிடுகிறார் தோனி.
குறிப்பாக இந்தமுறை நடைபெற்ற கொல்கத்தாவுடனான போட்டியில் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் காணப்பட்ட மதீஷ பதிரனவிடம் இரண்டு பந்துகளுக்கு ஒருமுறை அருகில் சென்று டெத் ஓவர்களில் எப்படி பந்துவீச வேண்டும் என தோனி ஆலோசனை வழங்கியிருந்தார்.
குட்டி மலிங்கா என வர்ணிக்கப்படும் மதீஷ பதிரனவை தோனி பட்டை தீட்டினார். ஓட்டங்களை வாரி வழங்கிய துஷார் தேஷ்பாண்டேவை தட்டிக்கொடுத்தார்.
பத்திரன போல் தோனி பட்டை தீட்டிய இளம் வீரர்கள் ஏராளம். ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார், மகீஷ் தீக்சன பல இளம் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் ஜொலிக்க தோனியும் ஒரு காரணம்.