தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது: விளையாட்டுத்துறை அமைச்சர்
பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்கி சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே தனுஷ்விற்கு தடை விதிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தடை நீக்கம் தொடர்பிலும் சட்ட மா அதிபருடன் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தனுஷ்க தொடர்பிலான வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நீதிமன்றத்தை அவமரியாதை
கடந்த 2022ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் போது தனுஷ்க பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.
சிட்னி பொலிஸார் தனுஷ்கவை கைது செய்யததனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபை, அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தது.
இந்நிலையில், நீதிமன்றின் ஆலோசனை இன்றி இலங்கை கிரிக்கெட் சபை தடையை நீக்கியுள்ளாகவும், இது நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் செயல் எனவும் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.