முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படவே கூடாது! வடக்கு ஆளுநர் வேதநாயகன்
முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக் கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட வேண்டும்.
அத்துடன், மக்கள் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களை நோக்கி நீண்ட தூரம் செல்ல வேண்டாத வகையில், தமது மாவட்டத்திலேயே தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதே எமது நோக்கம் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட புதிய மருத்துவ விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(16.09.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதேவேளை, வட மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நீண்ட காலமாக அபிவிருத்தியில் பின்தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு வெறுமனே அபிவிருத்திக்கான எதிர்பார்ப்பு அல்ல, நாட்டின் ஏனைய மக்களைப் போலவே சமமான வாய்ப்புகளுடன் வாழ வேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பு என்று இந்த நிகழ்வில் உரையாற்றும்போது குறிப்பிட்ட ஆளுநர், அந்த எதிர்பார்ப்புக்கு படிப்படியாகப் பதில் கிடைத்து வருகின்றது என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆண்டு வட்டுவாகல் பாலத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டதுடன், அதன் பணிகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அந்தப் பாலம் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அன்றாட மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் முக்கிய உட்கட்டமைப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்திய மக்களின் நிதியுதவியுடன் தற்போது மற்றுமொரு முக்கியமான சுகாதார உட்கட்டமைப்புத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்ட ஆளுநர், மருத்துவமனைக்கு கட்டடம் மட்டுமன்றி, மருத்துவர்களுக்கான வசதிகள், நோயாளிகளுக்கான தரமான சிகிச்சை மற்றும் தேவையான மருத்துவ மனிதவளம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் வலுவான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



