எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுப்புப் போராட்டம்! அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிவிப்பு
எதிர்வரும் 30.11.2026 அன்று ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அவர்களின் அறிவிப்பில் மேலும், நாட்டில் அரச சேவைக்கட்டமைப்பில் தவிர்க்க முடியாத அணியினராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, பல்வேறு அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களில் சுமார் 100,000 இற்கும் மேலான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் சேவையை பல்வேறு அலுவலக குறைபாடுகளோடு நேர்த்தியாக ஆற்றிவருகின்றனர்.
பாரிய பொருளாதார நெருக்கடிகளோடு சமூகத்தில் சாமானிய மனிதர்களாகக்கூட வாழமுடியாத நிலையோடு திண்டாடடுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம், அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையான வாக்குறுதிகளோடு அரசைப் பொறுப்பேற்ற புதிய அரசு நமது பொருளியல் நெருக்கடிகளை தளர்த்தக்கூடியவாறான முன்மொழிவுகளையும் சம்பள ஏற்றங்களையும், வாழ்க்கைப்படிகளையும் நியாயமாகவும் பக்கச்சார்பின்றியும் ஒவ்வொருவருடைய கல்வித்தரம் பதவிக்கேற்றவாறு 2027ஆம் ஆண்டுக்கான அரச வருமானம், செலவினங்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் அடங்கிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் சமர்ப்பிக்குமென நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தோம்.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்

ஆனால் 2026.11.12 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் ஆச்சரியமளிக்கக்கூடியவாறும் பாரிய அதிதிருப்தியைத் தோற்றுவிக்ககூடியவாறும் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்ககூடியவர்களும், அதனால் மக்களின் அதிருப்தி தங்கள் மீது திரும்பாதிருக்கக்கூடியவர்களாக கருதும் ஒருதொகுதி உயர் பதவியணியினரைத் திருப்திப்படுத்தக்கூடியவாறான சம்பள அதிகரிப்பையும் இதர கொடுப்பனவுகளை இரட்டிப்பாக்கியும் அதிகரித்தும் வழங்கி குறித்த வகுதியினரை திருப்திப்படுத்தி அவர்களூடாக இரும்புக்கரம் கொண்டு ஏனைய தொழில் வகுதியினரை வஞ்சிக்கவும் உடல் உழைப்பை உறிஞ்சவும் முனைவது தெளிவாகத் தோன்றுகின்றது.
மேற்தட்டடு மனோநிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட 2027 வரவு செலவுத் திட்டத்தில் உடனடியாக திருத்தங்களை மேற்கொண்டு நிபந்தனையற்ற அடிப்படையில் 25000/- வாழ்க்கைப் படியை உடனடியாக அரசு நடைமுறைசெய்யக்கோரி எமது வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் மத்திய மற்றும் மாகாண தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் இணைந்து 30.11.2026 அன்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 14(1)இல் உறுதி செய்யப்பட்ட தொழில் உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தொழிலாழர் தாபனத்தின் (ILO) சாசனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 78 மற்றும் 98 உரிமங்களின் அடிப்படையிலும் எந்தவொரு தொழில்வகுதியினரும் தமது தொழில்சார் உரிமைக்காக போராடும் உரிமை உறுதிசெய்யப்பட்டதன் அடிப்படையில் ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
எனவே குறித்த சட்டரீதியான நியாயபூர்வமான போராட்டதின் மீது எத்தகைய அழுத்தங்களையோ, நெருக்கடிகளையோ பிரயோகிக்க வேண்டாமென சகலதரப்பினரையும் கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 23 மணி நேரம் முன்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri