சங்கிலியன் தோப்பும் அரண்மனையும் எதிர்காலத் தலைமுறைக்கான வரலாற்றுச் சொத்துகள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
வரலாற்று மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு நிகழ்வுடன் முடிவடைய வேண்டிய பணியல்ல, எமது வரலாறு என்பது கடந்த காலத்தின் நினைவுகளை மாத்திரம் குறிப்பதல்ல, அது எமது இனத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமையையும் தமிழர் ஆட்சிப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் சங்கிலியன் தோப்பு மற்றும் சங்கிலியன் அரண்மனைப் பகுதிகளைப் புனரமைத்துப் பாதுகாப்பதற்கான பணிகள் நேற்றுமுன்தினம்(01.10.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஆட்சியின் பாரம்பரியம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சங்கிலியன் தோப்பும் அரண்மனைப் பகுதியும் வெறுமனே பழைமையான கட்டடங்களோ தொல்பொருள் சின்னங்களோ அல்ல. அவை யாழ்ப்பாணத்தின் அரசியல் வரலாறு, தமிழர் ஆட்சிப் பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் மற்றும் வரலாற்று நினைவுகளைத் தாங்கி நிற்கும் முக்கியமான மரபுரிமைத் தளங்களாகும்.

மேலும், சங்கிலியன் அரண்மனை தொடர்பான வரலாற்று நினைவுகள் யாழ்ப்பாணத்தின் கடந்தகால அரசியல் வரலாற்றுடனும் தமிழர் ஆட்சிப் பாரம்பரியத்துடனும் நெருக்கமாகப் பிணைந்துள்ளன.
எனவே, இந்த வரலாற்றுத் தளத்தைப் பாதுகாப்பது என்பது கட்டடமொன்றைப் புனரமைப்பதுடன் மட்டும் முடிவடைவதில்லை. அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உரிய முறையில் ஆவணப்படுத்தி, உண்மையான பெறுமதியை எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதும் அவசியமாகும்.
வரலாற்றுத் தளங்களை பாதுகாப்பது அவசியம்
புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் இத்தளங்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும், அவற்றின் தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் சிதைவடையாமல் பாதுகாப்பதற்கும், உரிய ஆய்வுகள் மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலமே ஒதுக்கப்படும் நிதியின் முழுமையான பயனை உறுதிப்படுத்த முடியும்.

வரலாற்று மரபுரிமைகளை அரசியல் விவாதங்களுக்குள் மட்டும் சுருக்கிவிடாமல், அவற்றின் வரலாற்று, பண்பாட்டு மற்றும் கல்விசார் பெறுமதிகளை உணர்ந்து பாதுகாக்க வேண்டும். இத்தகைய மரபுரிமைத் தளங்கள் தொடர்பான ஆய்வுகளும் பாதுகாப்புப் பணிகளும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மதிவதனி, பிரதி முதல்வர், மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.