வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்
வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் உறுத்தியளித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (13.02.2025) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநருக்கும், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடக்கு மாகாணத்தின் வலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதிநிதிகள் உட்பட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அமைப்பாளரும், பிரதி அமைச்சருமான சுந்தரலிங்கம் பிரதீப் அத்தோடு வடக்கு மாகாண இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் பிரதாஸ் உட்பட உறுப்பினர்கள் வடக்கு மாகாண ஆளுநர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆசிரியர்கள் இடமாற்றம், ஆசிரியர்கள் இடமாற்றத்தின் போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள், ஆசிரியர் நலன்புரி செயற்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் உள்ள பிரச்சினைகள் அதிபர் சேவை நியமனத்தின் போது காணப்பட்ட பிரச்சினைகள் என்பன இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் வாக்குறுதியளித்திருந்தார்.
அத்தோடு பல்வேறு பிரச்சினைகளும் எமது பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. அதனை சாதகமான முறையில் தீர்த்து வைப்பதாக ஆளுநர் கூறினார். இந்த கலந்துரையாடல் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. எதிர்காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும் என ஆளுநர் கூறியிருந்தார்.
மேலும், எதிர்காலத்தில் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும். இதன் மூலம் வடக்கு மாகாண கல்வியில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







