மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்! கர்நாடக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்தியாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் மத்திய அரசுக்கு கர்நாடக நீதிமன்றம் ஒன்று அறிவித்தலை அனுப்பியுள்ளது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள 38 பேரில் 25 பேர் சார்பில் கர்நாடக மாநில சட்டப்பணிகள் ஆணையகத்தால் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நேற்று கர்நாடக மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே இந்த அறிவித்தலை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவித்தல், மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பு, கர்நாடக உள்துறை அமைச்சகம், மங்களூரு தெற்கு பொலிஸ் ஆகியவற்றுக்கும் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்
மத்திய சிறைச்சாலைக்கு விஜயம் செய்த கர்நாடக மாநில சட்டப்பணிகள் ஆணையகத்தின் செயலாளர், இவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கண்டறிந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், இந்த தடுப்புக் காவல் 'சட்டவிரோதமானது' மற்றும் மனித உரிமை மீறல் எனக் கூறி, அவர்களை தடுப்பு மையங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த இலங்கையர் 38பேரும் கடந்த 2021 ஜூன் மாதத்தில் கர்நாடகா விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு அழைத்து செல்லப்படுவதாக அழைக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள்
விருந்தகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கர்நாடக பொலிஸார்
தெரிவித்திருந்தனர்.