சுரேஷ் சலே -ரணில் விக்ரமசிங்க வழக்குகளிலிருந்து திலீப பீரிஸ் நீக்கம்!
மேலதிக செலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு (Dileepa Peiris) துபாயில் உள்ள பாதாள உலகக் குழுவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில், சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளிலிருந்து திலீப பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற சுரேஷ் சலேவின் வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஓஸ்வால் பெரேரா என்ற அரச சட்டத்தரணியே ஆஜரானார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள்: விடுதலைப் புலிகள் வழங்கிய துல்லியமான தகவல்கள்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்
அவரை இவ்வழக்குகளில் ஆஜராக வேண்டாம் என உயர் மட்டத்திலிருந்து (சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்கவினால்) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
சட்டமா அதிபருக்குத் தனது அதிகாரிகளை நியமிக்கும் அல்லது மாற்றும் தன்னிச்சையான அதிகாரம் (Discretionary Power) இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இவ்வழக்கிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டமை பாதிக்கப்பட்ட தரப்பினர், புலனாய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சந்தேகத்தையும் உரையாடலையும் உருவாக்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேற்றை தினம் இச்சம்பவம் குறித்து ஒரு குழுவினர் சந்தித்து தெரியப்படுத்தியுள்ளனர். அதன் பின்னரே ஜனாதிபதியும் இத்தகவலை அறிந்து கொண்டுள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி சுரேஷ் சலேவின் வழக்கு விசாரணையின் போது கருணா அம்மான் அளித்த சிறப்பு வாக்குமூலம் மற்றும் ஏனைய முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் விரிவாக முன்வைக்கப்படுவதைத் தடுப்பதற்காக திலீப பீரிஸ் நீக்கப்பட்டாரா?

அல்லது ஓய்வுபெற்ற வான்படை அதிகாரியான சாந்த குமார ஜயதிலக்கவின் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதற்கான நியாயமான காரணத்தை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது.
சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்கவை இந்த பதவியில் நியமித்தது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலாகும். அந்த நியமனத்தின் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான அனிஷா ஜினசேன உட்பட இருவரை விடவும், பாலிந்த ரணசிங்க பெயரே பரிந்துரைக்கப்பட்டு அரசியலமைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
எனவே, அதற்கு நன்றிக்கடனாக ரணில் விக்ரமசிங்கவின் வழக்கில் அவர் பக்கம் சார்ந்து செயற்படுகிறாரா என்ற சந்தேகம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது ஒரு பாரிய விடயமாகும். ஏனெனில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்து, அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகிறது.