தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்கம் செய்ய இடமளியோம் - நாடாளுமன்றில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி
உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு எனவும், அதனை அரசு தடுக்கவில்லை எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06.10.2026) நடைபெற்ற அமர்வின்போது, வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கண்காணிப்பின் கீழ் ஆயுதக்குழுக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஆயுத மோதல்கள் நிலவிய காலப்பகுதியில் செயற்பாட்டில் இருந்த 7 துணை ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த குழுக்களிடமிருந்து இராணுவத்தால் மொத்தமாக 801 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஈ.பி.டி.பி. குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்டவற்றில் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய விசாரணைக்காக 30 ஆயுதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு நடவடிக்கை
இந்தக் குழுக்களின் தலைவர்களும் பெரும்பான்மையான உறுப்பினர்களும் தற்போது செயற்பாட்டு அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதேனும் ஏற்படுகின்றதா என்பது குறித்துப் படைப்பிரிவுகளும் புலனாய்வுப் பிரிவுகளும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்கம் செய்வதும், அது தொடர்பான விடயங்களை வெளிப்படுத்துவதும் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். வடக்கில் திலீபனுக்குச் சிலை வைத்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.