கரையை கடக்கவுள்ள காற்றழுத்த தாழ்வு: வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வடக்கில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அண்மித்ததாகக் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு
இது எதிர்வரும் 22ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மேற்குத் திசையில் நகர்ந்து 25ஆம் திகதி புயலாக மாறி இந்தியாவின் புவனேஸ்வருக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் புயலால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் தற்போதைய நிலையில் நேரடியாக எந்தப் பாதிப்புமில்லை.
இதன் காரணமாக எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடல் கொந்தளிப்பு
எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதத்திலும் மூன்று தாழமுக்க நிகழ்வுகள் தோன்றும் வாய்ப்புள்ளன.
நவம்பர் மாதத்தின் 18 நாட்கள் மழை நாட்களாக அமையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் எதிர்வரும் நவம்பரில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |