மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
'வாகன உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ்' அறிமுகப்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்களும், பகுப்பாய்வுகளும் மட்டுமே நடைபெற்று வருகின்றதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த முன்முயற்சியைச் செயல்படுத்துவது குறித்து 'வாகன உறுதித்தன்மை தொடர்பான மூலோபாயக் குழு' தற்போது ஆலோசித்து வருவதாகவும், குறிப்பாக பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான ஆய்வுக்குப் பின்னர் முடிவு

அதில் மேலும், இந்தச் சான்றிதழை நடைமுறைப்படுத்தும் திகதி, இது எந்தெந்த வகை வாகனங்களுக்குப் பொருந்தும், மைலேஜ் (mileage) வரம்புகள், செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் குறித்த முடிவுகள், முறையான ஆய்வுக்குப் பின்னரே எடுக்கப்படும்.
ஆகையால், இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் வரை, இந்தச் சான்றிதழை நடைமுறைப்படுத்தும் திகதி அல்லது அதன் நிபந்தனைகள் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ அல்லது தவறான செய்திகளையோ பரப்புவதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.