இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம்! ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் புதிதாக 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் பருவமழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 37 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை, டெங்கு காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் அதிக மழைவீழ்ச்சியைப் பெறும் மாவட்டங்களிலேயே கூடுதலான நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர் என்றும், வீடுகள் மற்றும் பொது இடங்களைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் துரிதமாக துப்புரவு செய்யுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் அறிகுறி தென்படும் பட்சத்தில் சுய மருத்துவம் செய்துகொள்வதைத் தவிர்த்து, தகுதிவாய்ந்த வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.