கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இன்று (08) கிளிநொச்சி நகர்ப்புற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட A9 பிரதான சாலையை மையமாக கொண்ட பகுதிகளை டெங்கு அற்ற சூழலாக மாற்றுவதற்கான சிரமதான வேலைத் திட்டமாக இது மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பல திணைக்களங்கள் இணைந்து கிளிநொச்சி நகர் பகுதியின் முக்கியமான நான்கு இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
திண்மக் கழிவுகள் தரம் பிரிப்பு
குழு 01 கரடிப்போக்கு சந்தியிலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகம் வரையும், குழு 02 கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்திலிருந்து டிப்போ சந்தி வரையும், குழு 03 டிப்போ சந்தியிலிருந்து கனகபுரம் சந்தி வரையும், குழு 04 டிப்போ சந்தியிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரையான இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை பரவலாக முன்னெடுத்தனர்.
இதனை விட பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் தமது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முக்கியமான நகர் பகுதிகளை பல திணைக்களங்களோடு இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களான குப்பைகள், பொலித்தீன் பைகள், வெற்றுப் போத்தல்கள் உள்ளிட்ட நீர் தேங்கக் கூடிய இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டு பெருமளவான திண்மக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையினரின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |