டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2023 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று வருடங்களின் எண்ணிக்கையை காட்டிலும் விட அதிகமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்படி, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 31139, 35054 மற்றும் 76467 ஆக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் 2023 டிசம்பர் 05 நிலவரப்படி, இந்த 11 மாதங்களில் மாத்திரம் மொத்தம் 78,022 டெங்கு தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
டெங்கு மரணங்கள்
இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 16,509 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
அதேநேரம் மேல் மாகாணத்தில் 36,480 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது மாகாண மட்டத்தில் அதிக எண்ணிக்கையாகும்.
அத்துடன் இது நாட்டின் மொத்த தொற்றுக்களில் 47 சதவீதத்திற்கும் அதிகமானவை எனவும், இலங்கையில் டெங்கு நோயினால் கடந்த 11 மாதங்களில் 46 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.