நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் இன்று வரை நாடு முழுவதும் 12 ஆயிரத்து 165 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய் பாதிப்பு
நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடக் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அதனைத் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இதன்படி, இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார அதிகாரிகள் மற்றும் மாநகர சபைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தத் தங்கள் வீடுகள் மற்றும் சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றுமாறும் சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.