மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு: விசேட குழுவினர் வீடுகளுக்கு சென்று சோதனை
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இன்று (9)முதல் எதிர்வரும் புதன்கிழமை (15) வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (9) காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் டெங்கு ஒழிப்பு வார ஆரம்ப நிகழ்வு ஆரம்பமானது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் உள்ளடங்கலாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது குழுக்கள் அமைக்கப்பட்டதோடு,பனங்கட்டிக்கொட்டு மற்றும் சின்னக்கடை பகுதிகளில் உள்ள வீடுகளுக்குக் குறித்த குழுவினர் சென்று டெங்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலும் பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள், பாதுகாப்புத் துறையினர், சுகாதார திணைக்களம் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து சிரமதான முறையிலும், குறிப்பாக டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பனங்கட்டுகொட்டு, எமில் நகர், பெரிய கடை, பேசாலை 5,8 ஆம் வட்டாரம், தோட்டவெளி போன்ற கிராமங்கள் உயர் ஆபத்துள்ள இடங்களாகச் சுகாதாரத் துறையினர் அடையாளப்படுத்தி உள்ளனர்.
குறித்த இடங்களில் எதிர் வரும் ஒரு வாரங்களுக்கு சிரமதானம் மேற்கொள்ளப்பட
உள்ளதோடு, அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு விசேட குழுவினர் சென்று வீடுகள்
பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு டெங்கு நோயினை
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




