நிலைமை மோசமடையக்கூடும்..! கொழும்பு உள்ளிட்ட பல மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
புதிய இணைப்பு
நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 46,000 ஐத் தாண்டியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனவரி மாதம் முதல் நாட்டில் 46,037 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மேலும், தற்போது தினமும் 600 முதல் 650 டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும், ஜூன் 1ஆம் திகதி முதல் 12,196 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், ஒரு மாதத்தில் பதிவான டெங்கு நோயாளிகளின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவென்றும் கூறியுள்ளார்.
மாகாண ரீதியாக ஒப்பிடுகையில், மேற்கு மாகாணத்தில் அதிகபட்ச டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 51.75 சதவீதம் ஆகும்.
இதற்கிடையில், டெங்கு நோயாளிகளில் 16.16% தெற்கு மாகாணத்திலிருந்தும், 9.35% சபரகமுவ மாகாணத்திலிருந்தும், 7.23% மத்திய மாகாணத்திலிருந்தும் மற்றும் 5.05% கிழக்கு மாகாணத்திலிருந்தும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயமுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 45,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேகமாக பரவும் டெங்கு நோய்
தற்போது மேல் மாகாணத்தின், களுத்துறை மாவட்ட பாணந்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம ஆகிய பகுதிகளிலும் டெங்கு நோய் மிக வேகமாகப் பரவி வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பல மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களையும் சுற்றாடலையும் சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO