புத்தளத்தில் டீசல் பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்
புத்தளம் - எலுவாங்குளம் பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் டீசலைப் பெற்றுத்தருமாறு கோரி இன்று எலுவாங்குளம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எலுவாங்குளம் பகுதியில் சுமார் 660 ஏக்கரில் ஒவ்வொரு வருடமும் விவசாயம் செய்து வருவதாகவும், இம்முறை ஏற்பட்ட உரம் தட்டுப்பாடு மற்றும் டீசல் இல்லாமையின் காரணமாக 300 ஏக்கர் நிலப்பரப்பிற்கே விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
வண்ணாத்திவில்லு பிரதேச செயலகம் முற்றுகையிடப்படும்
சிறுபோக விவசாயம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் உழவு இயந்திரங்களுக்கு டீசல்இல்லாமையினால் விவசாயத்தை மேற்கொள்வதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்குள் டீசலைப் பெற்றுத்தராவிட்டால் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி விவசாய மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.



