திருகோணமலையில் கிரவல் அகழ்விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (Photos)
திருகோணமலை - மொரவெவ பிரிவுக்கு உட்பட்ட எத்தாபெந்திவெவ பகுதியில் கிரவல் அகழ்விற்கு எதிராக இன்று (09) எதிர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டனர்.
ரொட்டவெவ - எத்தாபெந்திவெவ வீதி பல வருடங்களாகப் புனரமைக்கப்படாத நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டதாகவும் தற்போது அவ்வீதியினூடாக கிரவல் ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதாகவும் இதனால் வீதிகள் சேதம் அடைவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியைப் பாதுகாக்கும் நோக்கில் வீதியினூடாக கனரக வாகனங்களை கிரவல் ஏற்றிக்கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் தொடர்ச்சியாக இவ்வீதியால் கனரக வாகனங்கள் செல்வதால் பாடசாலை மாணவர்களைப் பகுதிநேர வகுப்பிற்குக் கூட அனுப்ப முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே உடைந்து காணப்படுகின்ற வீதியைப் புனரமைத்த பின்னர் கிரவல் அகழ்விற்கு அனுமதி வழங்குமாறும் அதுவரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கிரவல் அகழ்வு தொடர்பில்
அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து சட்டரீதியாக தங்களது கடமைகளைச்
செய்வதாகவும் மக்கள் தேவையற்ற விதத்தில் கூட வேண்டாம் எனவும் கோரிக்கை
விடுத்ததையடுத்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.







