தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தனின் (Dharmalingam Siddarthan) தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசைகள்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், சமூக வாழ்வின் எதிர்பார்ப்புகளையும், நாளாந்தம் முகம் கொடுத்துவரும் நெருக்கடிகளையும், தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்களையும் உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய வகையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து ஏற்றுக் கொண்டதோடு அதனை முன்கொண்டு செல்வதற்கான முழு ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்தோம்.
இந்நிலையில், இந்த தீர்மானத்தை ஒரு சில அரசியல் கட்சிகளினதும், ஒரு சில சமூக செயற்பாட்டுக் குழுக்களினதும் தீர்மானமாகவன்றி, தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்துத் தரப்பினரதும் ஏகோபித்த கோரிக்கையாக முன்னெடுப்பதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்மானங்களை மிகவும் காத்திரமான முறையில் வலுமிக்கதான முன்னெடுக்க முடியும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்ப் பொது வேட்பாளர் கோரிக்கை பேசுபொருளாக ஆரம்பித்த காலத்தைவிட இன்றைய காலகட்டத்தில், பல்வேறு தரப்பினரது அயராத முயற்சிகளால், அக் கோரிக்கையின் ஆதரவுத் தளம் அதிகரித்து வருவதோடு கோரிக்கையின் நியாயத்தன்மையும் பரந்த அளவில் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |