'தெமட்டகொட ருவன்' பிணை விவகாரம்: துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
சட்டவிரோத பணமீட்டல் குற்றச்சாட்டில் கைதாகியிருந்த 'தெமட்டகொட ருவன்' எனப்படும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா நேற்று(20) இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
பிணை விவகாரம்
துமிந்த சில்வாவிடம் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணியளவில் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொள்ள நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

இதன்போது, தனது சட்டத்தரணி முன்னிலையில் வாக்குமூலம் அளிப்பதற்கான உரிமை சந்தேகநபருக்கு உண்டு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக கடந்த 13 ஆம் திகதி துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் சென்றிருந்தனர்.
எனினும், தனது சட்டத்தரணியின் ஆலோசனை இன்றி வாக்குமூலம் அளிக்க முடியாது என அவர் தெரிவித்ததை அடுத்து, அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி
துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம்
இது குறித்து ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே தற்போதைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட ருவனுக்குப் பிணை பெற்றுக்கொடுப்பதற்காக 50 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முஹம்மது மொஹிதீன் சப்ராஸ் நவாஸ் என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்த இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெறுவது அவசியமானது என்று வலியுறுத்தியது.
இதற்கமைய, சப்ராஸ் நவாஸை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், துமிந்த சில்வா தொடர்பில் சாட்சிச் சுருக்க அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு பணித்தார்.