சீனாவில் மீண்டும் தீவிரமாக பரவி வரும் டெல்டா பரவல்! கட்டுப்படுத்த தீவிரமாக போராடும் அரசு
சீனாவின் வூஹான் நகரில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு இருக்கும் 1.12 கோடி மக்களிடம் கோவிட் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த 2019இல் இறுதியில் முதல்முதலில் சீனாவின் வூஹான் நகரிலேயே கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவிட் தோற்றம் பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை. சீனாவில் முதல் முதலில் கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டாலும், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் அந்நாடு மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் உலகமே கோவிட் பாதிப்பு காரணமாகத் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், சீனா மட்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி தீவிரமான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பை மிக சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கோவிட் இப்போது உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.
100க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போது டெல்டா கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் சீனாவை டெல்டா கோவிட் தாக்கியுள்ளது.
பல வாரங்களாக கட்டுக்குள் இருந்து கோவிட் பாதிப்பு, சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரு சில நாட்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 2019இல் கோவிட் முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் அங்குள்ள 1.12 கோடி மக்களுக்கு கோவிட் பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நகரிலுள்ள மக்களிடையே மாதிரிகள் சேமிக்கப்பட்டு, பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.