டெல்லியை உலுக்கிய குண்டு வெடிப்பு! டி.என்.ஏ. பரிசோதனையில் வெளியான தகவல்
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ள நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
சி.சி.டி.வி. காட்சிகள்
சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ20 கார் மாலை 6.48 மணியளவில் சமிக்ஞையில் மெதுவாக நகர்த்தப்பட்டு வெடித்து சிதறியது.

வெடிக்கும் முன் அந்த காரின் சாரதி இருக்கையில் உமர் என்பவர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.
எனவே அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உமர் முகமது ஓர் தீவிரவாதி என்பதும் அரியானாவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைதான மருத்துவர் ஷகீரின் நண்பர் என்பதும் அம்பலமானது.
உமர் முகமது, ஜம்மு- காஷ்மீர் புல்வாமில் 1980-ம் ஆண்டு பிறந்துள்ளான் என்பதுடன் பரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா மருத்துவ கல்லூரியில் வைத்தியராக பணிபுரிந்துள்ளார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் அரியானா பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளான வைத்தியர் அதில்அகமது ராதர் மற்றும் வைத்தியர் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் நெருங்கிய உதவியாளராக இருந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த இருவரின் கைதே உமர் முகமது இந்த குண்டு வெடிப்பை நடத்த தூண்டியதாக கூறப்படுகிறது. டெல்லியில் வெடிக்க வைக்கப்பட்ட காரை உமர் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் வாங்கியுள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி காரை வாங்கி பரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக்கழகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் கடந்த 10ஆம் திகதி வரை கார் அங்கேயே இருந்துள்ளது. காரை வாங்கி கொண்டு வந்த போது அந்த காரில் ஆண்கள் 3 பேர் இருந்து உள்ளனர்.
10ஆம் திகதி உமர் அந்த காரை ஓட்டி சென்று வெடிக்க செய்துள்ளதாக இதுவரையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டு வெடிப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு குண்டு வெடிக்கும் வரை காரை விட்டு கீழே இறங்காமல் காத்திருந்துள்ளான்.
உமர் முகமது அவனது கூட்டாளிகள் 2 பேர் வருவதற்காக அங்கே காத்திருந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கார் குண்டு வெடிப்பில் உமர் முகமது இறந்தாரா? அல்லது தப்பித்தாரா என்பது இதுவரையில் தெரியவில்லை. இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ளது. குண்டுவெடிப்புக்குப் பிறகு, உமர் முகமது கால் ஸ்டீயரிங் மற்றும் ஆக்ஸிலேட்டருக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.