தையிட்டி காணி அளவீடு விவகாரம் : உரிமையாளர்களின் கோரிக்கைக்கு தவிசாளர் சுகிர்தன் கண்டனம்
காணி உரிமையாளர்களின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே தையிட்டி காணி அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் நேற்று(28.04.2026) காணி அளவீட்டுப் பணிகள் மீண்டும் இடைநிறுத்தம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்
காணி உரிமையாளர்களின் கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கில் யாழ். மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒரு கடிதத்தை வழங்கியுள்ளனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட திணைக்களத்தின் கடிதத் தலைப்பில் தான் அது வேண்டும் என உரிமையாளர்கள் பிடிவாதம் பிடித்துள்ளனர்.
அத்துடன், ஒரு திணைக்களத்தின் கடிதத் தலைப்பில் ஏனைய திணைக்கள அதிகாரிகள் கையெழுத்திட முடியாது என்ற அடிப்படை விடயத்தைக் கூடப் புரிந்துகொள்ளாமல் காணி உரிமையாளர்கள் செயற்பட்டமையால் காணி அளவீடு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காணி உரிமையாளர்கள் மீது அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இருக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆரம்பத்திலிருந்தே இந்த அளவீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
இதிலிருந்து, அந்த அரசியல் கட்சியினரின் தூண்டுதலாலேயே இவ்வாறான முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன என்பது தெளிவாகின்றது.
அத்துடன், காணிகளை விடுவிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இருந்தும், அதனைப் பயன்படுத்தத் தவறியது கவலையளிக்கின்றது.

இந்தப் பிரச்சினையை நீண்டகாலம் இழுத்தடித்தால் எதிர்காலத்தில் காணிகளை விடுவிக்க முடியாத சூழல் ஏற்படலாம்.
மேலும், அங்கு வந்திருந்த காணி உரிமையாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் அளவீட்டுக்கு ஆர்வமாக இருந்த போதிலும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு ஏனையோருடன் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தனர் என சுட்டிக்காட்டினார்.