முதியோர் கொடுப்பனவு குறித்து கந்தளாய் பிரதேச முதியோர்கள் விடுத்துள்ள கோரிக்கை
கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் வழங்கப்படாமையினால், முதியோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தமக்குரிய கொடுப்பனவுகள் குறித்த திகதியில் வழங்கப்படாத காரணத்தினால், முதியோர்கள் நாளாந்தம் தபால் நிலையங்களுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு, நடமாட முடியாத நிலையில் உள்ள முதியோர்கள் கூட, கொடுப்பனவு வந்துள்ளதா எனப் பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் முச்சக்கர வண்டிகளில் பணம் கொடுத்து தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
கோரிக்கை
தமக்குக் கிடைக்கும் சொற்ப தொகையும் இவ்வாறான போக்குவரத்துச் செலவுகளுக்கே வீணாவதாக கவலை கொள்கின்றனர்.
அரச அதிகாரிகள் முதியோர்களின் நலனில் அக்கறை காட்டாமல், கருணையற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சுமத்துகின்றனர்.
முதியோர்களின் உடல் மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு முறையான அறிவித்தல்களை வழங்க அதிகாரிகள் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நாளில் பணம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லாததால், முதியோர்கள் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமது அந்திமக் காலத்தேவையை பூர்த்தி செய்ய அரசு வழங்கும் இந்தக் கொடுப்பனவை, எவ்வித அலைக்கழிப்புகளும் இன்றி உரிய நேரத்தில் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கந்தளாய் பிரதேச முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.