தெஹிவளை சென்டோவின் பிரதான துப்பாக்கிதாரி கைது
வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள 'தெஹிவளை சென்டோ' எனப்படும் பாதாளக் குழு உறுப்பினரின் பிரதான ஒப்பந்தத் துப்பாக்கிதாரி, ஐஸ் போதைப்பொருளுடன் கொட்டாவைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாவைப் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதித் தடைச் சோதனையின் போதே 10 ஆயிரத்து 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இந்தச் சந்தேகநபர் பிடிபட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.
கைக்குண்டு ஒன்று மீட்பு
கைது செய்யப்பட்ட நபர் இலங்கை விமானப் படையிலிருந்து தப்பியோடிய முக்கிய ஒப்பந்தத் துப்பாக்கிதாரி என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்தப்பட்ட போது, இவர் தெஹிவளை மற்றும் கல்கிஸை பகுதிகளில் இடம்பெற்ற இரு மனிதப் படுகொலைகள் தொடர்பில் நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாகியிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
ஹோமாகம - கொட்டாவ வலய குற்றத் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்துக்கமைய, எதிர்வரும் நாள்களில் கல்கிஸை பகுதியில் படுகொலைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தமை, பொலிஸாரின் இந்தக் கைது நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.