எரிபொருள் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அநுர பதிலடி! வெளியான அதிரடி அறிவிப்பு
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவ பகுதியில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் போர்
மத்திய கிழக்கில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவாகக் காணப்பட்டதாகவும், போர் காரணமாக தற்போது டீசல் மற்றும் பெற்றோலின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் ஏப்ரல் மாதம் முதல் டீசல் லீட்டருக்கு 100 ரூபா வீதம் மானியம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் டீசல் லீட்டருக்கு 70 ரூபா மானியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களின் விலை
கடந்த காலங்களைப் போல அதிகளவான ஊழியர்களை நியமிக்காமல், பொறியியலாளர்கள் உள்ளிட்ட 10 பேரை மாத்திரம் புதிதாக இணைத்துக்கொண்டு நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால், அதே விலையில் தங்களால் விற்பனை செய்ய முடியாது எனத் தெரிவித்து தனியார் நிறுவனங்கள் விலை அதிகரிப்பைக் கோருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனம் டீசல் லீட்டருக்கு 132 ரூபாவையும், மற்றொரு நிறுவனம் 116 ரூபாவையும் அதிகரிக்கக் கோரியதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் அந்தளவுக்கு விலையை அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில், 70 ரூபா மானியத்துடன் டீசல் லீட்டருக்கு 10 ரூபா மாத்திரமே விலை அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
விலையை அதிகரிக்காவிட்டால் எரிபொருள் விற்பனையைத் தொடரப்போவதில்லை எனத் தனியார் நிறுவனங்கள் தெரிவிப்பதாகவும், தற்போதுள்ள பழைய ஒப்பந்தங்கள் காரணமாக அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த ஒப்பந்தங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், உலகளாவிய போர் மற்றும் பணவீக்கச் சூழலால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நூல்கள் மீதான வரிகளை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் மானியங்களைத் தொடர்ந்து வழங்கவும், பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து நிவாரணம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.