வவுனியா வனவளத் திணைக்களத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் உதவியுடன் காடழிப்பு மற்றும் மரக்கடத்தல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வுனியா மாவட்டத்தில் நீண்ட காலமாகவே வனவளத் திணைக்களத்தின் உதவி மற்றும் ஒத்தாசைகளுடன் காடழிப்பு மற்றும் மரக்கடத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பூவரசங்குளம் வனப்பிரதேசத்திற்கு உட்பட்ட வேலங்குளம் ஒதுக்கு வனப்பகுதியில் குறித்த மரக்கடத்தல் சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
இலங்கையின் உலர் பருவக்காடுகளில் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதியான குறித்த வேலங்குளத்தில் ( 8°46'44.57" N, 80°20'37.31" E ) இருந்து வனவளத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் 5KM தூரத்திற்கு உள்ளாகவே அமைந்துள்ளது.

குறித்த காடானது மேற்குப்புறமாக மடு ஒதுக்குக் காட்டுடன் யானை வழித்தடமாக அமைந்துள்ளது.
இந்தப் பிரதேசத்தின் பாரிய காடுகளுக்குள் நீண்ட காலமாக நடைபெறும் பெறுமதி மிக்க மரங்களின் கடத்தல்களுக்குத் துணைபோன வனவள அதிகாரி ஒருவர் கடந்த இரண்டாண்டுக்கு முன்பு இடமாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவற்றுக்குத் துணைநின்ற ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி இதனுடன் இணைந்த வேறு காரணங்களுக்காகவும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மிக நீண்ட காலமாகவே வேலங்குளம், ஓமந்தை, பம்பைமடு, கள்ளிக்குளம், பாலமோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் உதவி ஒத்தாசையுடன் இவை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


