மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்
நாட்டில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இதனால் நகர்ப்பகுதிகளில் ஒரு சிலர் நடமாடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கிடையில் பயணக்கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட முற்பட்ட சிலர், பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன், முகக்கவசம் அணியாமை உட்படத் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். மலையக நகர்ப்பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தாலும் தோட்ட பகுதிகளில் இயல்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் தொழிலாளர்களும் வேலைக்குச் சென்றதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.
சமூக இடைவெளி உட்படச் சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. இந்நிலை தொடருமானால் தோட்டப்பகுதிகளில் உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருப்பதாக மலையக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும் நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளுக்குச் செல்ல
முடியும் என்பதுடன், அதற்காக விசேட அனுமதி எதுவும் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.




